தேசிய கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கே நிவாரணம் - சம்பிக்க!
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.
தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த திட்டங்கள் தவறானதாக உள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி விநியோகித்துள்ள திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் போது மத்திய வங்கி ரூபா பெறுமதி அலகு நெருக்கடியை எதிர்கொள்ளும். இந்த நிலையை முகாமைத்துவம் செய்ய ஒன்று நேரடி வரி அறவீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்.
ஆகவே திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.