பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டம்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், டொலரில் இருந்து வேறுப்பட்டது எனவும் அறிய முடிகிறது. இது கடன் அடிப்படையிலான டொலருக்கு முற்றிலும் மாறாக அதிக மதிப்புள்ள நாணயமாக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நாயணம் அறிமுகப்படுத்தப்பட்டால் பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணைய முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கத்தின் அடிப்படையிலான புதிய நாணயமானது வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக புதிய பரிவர்த்தனையில் தங்கத்தின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் ஒற்றை நாணய அலகு பலப்படுத்தப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஜூன் 2009 இல் பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கியது.
2050 ஆம் ஆண்டளவில் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தென்னாப்பிரிக்காவும் கடந்த 2010 இல் இணைந்துக் கொண்டது.
அத்துடன் அர்ஜென்டினா, அல்ஜீரியா, பஹ்ரைன், வங்கதேசம், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளன.
மேலும், பிரான்ஸ், கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட மேலும் 41 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



