புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது மைத்திரிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட பணத்தில் இழப்பீடு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.
தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 10 கோடி ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 5 கோடி ரூபாயும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் ஒரு கோடி ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதிவாதிகள் எவரும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் நிதியில் பணத்தை வரவு வைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீடு வழங்கப்படாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.