தரமற்ற மருந்து பாவனையால் 09 பேர் உயிரிழப்பு - அகில இலங்கை தாதியர் சங்கம்!
தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த ஆரச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், நோயாளர்களின் உயிரை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார்.
ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்துகளால் மூன்று மாதங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ, ஐரோப்பிய ஒன்றியங்கள் போன்ற இடங்களிலும் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுவதாகவும், இருப்பினும் அந்த மரணங்களுடன் இவற்றை ஒப்பிட முடியாது எனவும் கூறினார்.