ரஷ்யாவின் ”பேய் ரயில்” : புட்டின் பயணிக்கும் கவச ரயிலின் ஆடம்பர வசதிகள் பற்றி தெரியுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கவச ரயிலில் அடிக்கடி பயணம் செய்வதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள இந்த கவச ரயிலில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்த கவசரயில் பாதுகாப்பானது மட்டுமன்றி ஒரு ஆடம்பரமானதும் கூட. அது சம்பந்தமான சில தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த ஆடம்பர ரயிலின் சில புகைப்படங்களை விசாரணை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த ரயில், அழகுசாதன மையம், உடற்பயிற்சி மையம், ஸ்பா மற்றும் பிற வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘ஆன்டி ஏஜிங் மெஷின்கள்’, நுரையீரல் வென்டிலேட்டர், டிஃபிபிரிலேட்டர் மற்றும் நோயாளி மானிட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்த ரயில் தற்போது 60 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கையொன்றும் வெளியாகியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பிறகு, ரயிலில் சினிமா மற்றும் ஹெல்த் கேரேஜ் பொருத்தப்படும் என மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் புட்டின் பயணம் செய்யும்போது 'தலைமை பயணி' என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த ரயிலானது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக AK-47 தாக்குதலை தடுக்க கூடிய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயிலின் எஞ்ஜின்களுக்கு எவ்விதமான அடையாளமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு திரைகளுடன் கூடிய இந்த ரயிலை “பேய் ரயில்” என நிபுணர்கள் அழைப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



