மனிதப் புதைகுழி ஆதாரங்கள் மூடி மறைக்கப்படலாம் ! புலம்பெயர் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கும் என்பதால், சர்வதேசம் இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆதாரங்களை மூடி மறைக்கும் செயற்பாடுகளுக்கு ஆயுதப்படையினரின் உதவியும் இருக்கலாம்.
அதனால் இந்த விடயத்தில் சரியானதொரு தீர்வு பெறப்பட வேண்டும் மனிதப் புதைகுழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கும் என்பதால், சர்வதேசம் இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவேனும் இந்தப் புதைகுழி தொடர்பான விடயங்களை மூடிமறைத்து அழிப்பதற்கு முயற்சிகளை எடுக்கலாம்.
எனவே இந்த விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் மாத்திரமன்றி மனிதநேயமுள்ள அனைத்து நாடுகளும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
சர்வதேச நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்த அகழ்வு நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.