விமானிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை - நிமல் சிறிபால டி சில்வா!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையினால் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாதமையினால் ஏற்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய (ஜுலை 07) அமர்வில் அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு அதிக தேவை காணப்படுவதாகவும், ஆனால் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான விமானிகள் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 26 விமானங்களை இயக்கிய போது 316 விமானிகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 15 விமானங்கள் மட்டுமே இயங்கும் போது 266 விமானிகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
26 விமானங்களை இயக்குவதற்கு 316 விமானிகள் இருந்தபோது, நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்றன. விமானிகளின் அர்ப்பணிப்பு குறைபாடு காரணமாகவே தற்போது விமான சேவை சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
விமானிகளின் நாசவேலை காரணமாகவே அண்மையில் கொரியாவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.