மருந்துப் பொருட்கள் தொடர்பில் ஆராய விசேட கலந்துரையாடல்!
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மருந்துகள் கொள்முதல் செயல்முறை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதும் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரத்துறையின் பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பில் துரிதமாக கண்டறியுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.