குழந்தைகள் உரிமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம்!

கடந்த 2022 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் காங்கோ மற்றும் சோமாலியாவில் உள்ள மோதல்கள் பெரும்பாலான குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹைட்டி, நைஜீரியா, எத்தியோப்பியா, மொசாம்பிக் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள குழந்தைகள் குறித்து யுனிசெப் நிறுவனம் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், கடந்த ஆண்டில் மாத்திரம் 27 ஆயிரம் குழந்தை வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டு (2021) இல் 24 ஆயிரமாக காணப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 27 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சமீப காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யுனிசெஃப் எதிர்பார்ப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாத இறுதியில் தனது வருடாந்த அறிக்கையை வாசித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உக்ரைனில் குழந்தைகள் மீதான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக ரஷ்யாவை தடுப்பு பட்டியில் சேர்ந்திருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு 54 கொலைகள் உட்பட 1,139 பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு எதிரான கடுமையான மீறல்களுக்காக ஐ.நா. தலைவர் இஸ்ரேலை தடுப்புப்பட்டியலில் சேர்க்கவில்லை என்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



