வடகொரியா உளவுக்கோளை செலுத்தும் அளவிற்கு முன்னேறவில்லை - தென்கொரியா!

வட கொரிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உளவு பார்க்கும் அளவிற்கு இன்னும் முன்னேறவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை மே மாத இறுதியில் ஏவ முயன்றது எனவும் ஆனால் அதை சுமந்து சென்ற நீண்ட தூர ரொக்கெட் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் விரைவிலேயே கடலில் விழுந்தது எனவும் கூறியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விண்வெளி அடிப்படையிலான உளவு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வட கொரியா கூறுகிறது. ஆனால் தென்கொரியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கவே உளவுகோளை செலுத்த முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வடகொரியாவின் இந்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்த நிலையில், செயற்கைகோளை செலுத்தும் அளவிற்கு வடகொரியா முன்னேறவில்லை என தென்கொரியா விமர்சித்துள்ளது.
நேற்றுடன் (ஜுலை 05) முடிவடைந்த 36 நாள் நடவடிக்கையில் ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோளில் இருந்து குப்பைகளை மீட்டெடுக்க தென் கொரியா கடற்படை கப்பல்கள் முயற்சித்துள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



