நாட்டில் நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
நாட்டின் நீர் வழங்கல் துறையில் புதிய சீர்திருத்த நடவடிக்கை திட்டத்திற்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கும் தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் டகஃபுமி கடோனோ ஆகியோருக்கு இடையில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
திட்டமிடல், கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் இலங்கையில் நீர் வழங்கல் துறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டது. இந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய சாகல ரத்நாயக்க, நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.