அடையாள அட்டையை அடமானமாக வைத்து அதிக வட்டிக்கு கடன் கொடுத்த நபர் கைது
ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் உட்பட தீவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பிரதேசவாசிகளின் அடையாள அட்டைகளை பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், சந்தேக நபர் தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை பிணையமாக வைத்து அதிக வட்டியில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வட்டிக்கு கையொப்பமிட்டவர்களிடம் பெற்றுக் கொண்ட கைரேகைகள் மற்றும் கையெழுத்துகளுடன் கூடிய சில காகிதங்கள் அல்லது கடன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டைகள் காணாமல் போவதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், உத்தியோகத்தர் ஒருவரைப் பயன்படுத்தி இந்த மோசடியை வெளிக்கொண்டு வந்ததையடுத்து, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபரின் ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது, பொலிஸாரால் கைப்பற்ற முடிந்ததாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் ஹட்டன் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தனியான விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.