மற்றொரு சிறைச்சாலை அதிகாரிக்கு பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கொலை மிரட்டல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு புலம்பெயர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாயில் பதுங்கியிருக்கும் “ஹண்டயா” தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இவ்வாறு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களிடம் அவர்கள் சிறையில் தங்குவதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று நேற்று பிற்பகல் குறித்த அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் கடமையாற்றும் சிறைக்காவலரின் வீட்டுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என குறித்த அதிகாரிக்கு அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்ய சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.