தைவான் ஜலசந்தி முழுவதும் பதற்றங்களை அதிகரிக்கும் அமெரிக்கா!

சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா கொச்சையாக தலையிடுகிறது என சீனா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் டான் கெஃபே கடுமையாக சாடியுள்ளார்.
தைவானிற்கு தேவையான வாகன உதிரி பாகங்கள், சிறிய ஆயுதங்கள், போர் ஆயுத அமைப்புகள் மற்றும் தளவாட ஆதரவு பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சீனா மேற்படி விமர்சித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், அமெரிக்கா தைவான் ஜலசந்தி முழுவதும் வேண்டுமென்றே பதட்டங்களை அதிகரிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தைவான் மக்களை பேரழிவின் படுகுழியில் தள்ளுவதற்கும் சமம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் விடுதலை இராணுவம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகவும் கூறினார்.
தைவானை தனது சொந்தப் பகுதி என்று உரிமை கோரும் சீனா, தேவைப்பட்டால் பலவந்தமாக கைப்பற்றப்படும் எனவும் அறிவித்துள்ளது.



