சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் முரண்பாடு உள்ளதா? சபையில் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி
சபாநாயகர் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவர் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார் அதற்கு அரச நிதிக்குழுவின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது உங்களது தீர்மானத்தின் பிரகாரம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியின் அழைப்புக்கு முரணாகவே அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்குமிடையில் மோதல் ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்ககளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார்.
ஆனால் தற்போது அந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நீங்கள் செயற்படுவதாக இருந்தால், நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவராக இருக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எனது அறிவிப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அறிக்கையை முறையாக வாசித்து பாருங்கள் என்றார்.