சஜித் பிரேமதாஸ கேள்வி கேட்க முடியாது: சபாநாயகரின் அறிவிப்பால் சபையில் அமளிதுமளி
அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பது உகந்ததல்ல அவர் எந்த நேரத்திலும் அரச அதிகாரிகளை அழைத்து எந்தவொரு விடயம் குறித்தும் விளக்கம் கேட்கலாம், ஆனால் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் இந்த விடையத்தை அறிவித்ததை அடுத்து, சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்பு குறித்து, COPF கூட்டத்தில் பிரேமதாசவின் இருப்பு பொருத்தமானதல்ல என சபாநாயகர் தெரிவித்தார்.
”உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது EPF மற்றும் ETF இல் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்பதற்காகவே நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன்” என சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு பதிலளித்தார்.
”உள்நாட்டுக்கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எனக்கு சில முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு வாய்ப்பளித்திருந்தால் நான் அவற்றை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேன்.
எனவே இனி நான் அனைத்து அரச அதிகாரிகளையும் இது தொடர்பில் வரவழைப்பேன். அவர்கள் வருகை தர மறுத்தால் எனது சிறப்புரிமைகள் மீறப்படும். அதற்கு சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என சஜித் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே எதிர்க்கட்சித் தலைவர் COPF கூட்டத்தில் பங்கேற்றதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியுடன் உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.அதனால் தான் நீங்கள் அவரின் முயற்சிகளுக்கு நாசவேலை செய்கின்றீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகரை நோக்கிக் கூறினார்.
சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தனக்கு ஜனாதிபதியுடன் எந்த பிரச்சினையும் இல்லையெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற மரபுகள் தொடர்பில் தான் ஆய்வு செய்ததாகவும் அதற்கமைய, பாராளுமன்ற சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு பாராளுமன்றக் கட்டமைப்புக்குள் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினாலும்,
இந்தப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்குக் குழுக்களின் அலுவல்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு பரந்த இடம் காணப்படுகின்றமையினாலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு நிலையியற் கட்டளைகள் 121(1) இன் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும்,
இவ்வாறான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது மேலே குறிப்பிடப்பட்ட பொறுப்பான பதவி வகிப்பவர்களை அழைப்பது பொருத்தமற்றது என்பதால் குறித்த கூட்டத்தின் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்குவதற்குக் குழுவின் தலைவரினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் சபைக்கு வலியுறுத்தினார்.