சீரற்ற வானிலையால் இலங்கையின் பல பகுதிகள் பாதிப்பு!
சீரற்ற வானிலையால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழை மற்றும் காற்று காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் 115.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக ருவான் எலியா ஜப்பானிய தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது 16 அடி உயர பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலத்த காற்றின் காரணமாக பொலன்னறுவை, திம்புலாகல, ஹிகுரக்கொட, மெதிரிகிரிய, தம்மாவெவ, பாம்புரான உள்ளிட்ட பல பகுதிகளில் 15 வீடுகள் மற்றும் பல கடைகள் சேதமடைந்துள்ளன.
திம்புலாகல, மனம்பிட்டிய, மாகங்தொட்ட கிராமத்தில் உள்ள வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்றுடன் அடுப்பில் எரியும் நிலக்கரியில் இருந்து தீ பரவியதால் இந்த அழிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.