போக்குவரத்து துறையில் தேசிய கொள்கையை தயாரிக்க நடவடிக்கை!
போக்குவரத்து துறையில் தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆரம்பிக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதியளித்துள்ளார் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் .சம்பத் ரணசிங்க மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “போக்குவரத்து தொடர்பில் தேசிய கொள்கை இல்லாததே இங்கு பிரதான பிரச்சினை. இது தொடர்பில் தொழிற்சங்க தலைமை அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.
25 வருட தேசிய கொள்கையின் ஊடாக இந்த நாட்டில் நாளைய போக்குவரத்து திட்டத்தை உருவாக்க முடியாது. நாட்டிற்கு ஏற்ற தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை பேணக்கூடிய புதிய தொழில்நுட்பம், நவீன போக்குவரத்து திட்டத்தை உருவாக்க புதிய தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும்.
இதற்கு அமைச்சர் வாக்குறுதி அளித்தார். நவம்பர் மாதம் தேசிய கொள்கைக்கு அடித்தளம் அமைக்க ஒப்புக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.