தவறான தரவுகளின் அடிப்படையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது: முன்னாள் தலைவர் ஜானக
கடந்த பெப்ரவரி மாதம் மின்கட்டண அதிகரிப்பு தவறான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை தற்போதைய மின்சாரக் கட்டணக் குறைப்பு நிரூபிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மின்சார சபை கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிக்க முன்வந்த போதிலும், அப்போதைய உண்மையான செலவுத் தரவுகளை கருத்திற்கொண்டு சுமார் 30 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.
ஜனக ரத்நாயக்க மேலும் கூறியதாவது:
அரசியல் அழுத்தங்கள் காரணமாக, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் அதே வழியில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.
இன்று அவர்களே CEB தரவுகள் தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளனர். எனவேதான் மின்சாரக் கட்டணத்தை 3 வீதமாக குறைப்பதற்கு பதிலாக 14 வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அப்போது நான் கட்டண உயர்வுக்கு எதிராக இருந்ததால், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.
இன்று தலைவர் பதவியை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இறுதியில் அனைவரும் என் வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நான் வாழ்த்துகிறேன்.
ஏனென்றால், ஆணைக்குழுவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நான் அன்று எடுத்த நடவடிக்கைகள் இன்று அவர்களால் தொடர்கின்றன.
ஒட்டுமொத்த மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது.
இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் ஓரளவுக்கு நீதி கிடைத்துள்ளது. எனவே அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியும்.
மேலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமான கட்டணத்தை வழங்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.