புதிய அரசாங்கத்தின் கீழ் நிதி ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது - காஞ்சன விஜேசேகர
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பாதையில் செல்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
”நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின்கீழ், மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டிலும் நிதி ஸ்திரத்தன்மை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மின்சார விலைத் திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர், ஜூன் மாத விலை திருத்தத்தின் போது, மொத்தமுள்ள 6 மில்லியன் பாவனையாளர்களில் 3.5 மில்லியன் மக்களுக்கு மின்சார விலையில் கணிசமான 55% நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டில், எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு போன்ற சவால்களை நாடு எதிர்கொண்டாலும், புதிய அரசாங்கத்தின் முடிவுகளின் கீழ், எரிபொருள் வரிசைகளை நீக்குவதிலும், தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.