முத்துராஜா தாய்லாந்தில் நலம்: மற்ற யானைகள் குறித்தும் ஆராய்வு!
தாய்லாந்து இலங்கைக்கு வழங்கிய மற்ற இரண்டு யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக காஞ்சனா சில்பா ஆர்ச்சா தலைமையிலான குழுவினர் பணியாற்றி வருவதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கதிர்காமத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கண்டியில் உள்ள விகாரைக்கு தானமாக வழங்கப்பட்ட யானை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தூதுக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தாய்லாந்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட யானையின் உடல்நிலையை பரிசோதிக்க தூதுக்குழு நேரம் எடுத்துக்கொண்டதாக பிபிஎஸ் வேர்ல்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.
1979 ஆம் ஆண்டு தாய்லாந்து இந்த யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதாக இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.சுகாதார காரணங்களுக்காக யானை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கோவில் தூதுக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக PBS World இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த யானைகளை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல பயந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தாய்லாந்து தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக PBS World இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
தாய்லாந்து வந்தடைந்த முத்துராஜாவின் உடல்நிலை பொதுவாக நன்றாக இருப்பதாகவும், முத்துராஜாவின் காயங்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, முத்துராஜாவின் எக்ஸ்ரே பரிசோதனை தேவை என்று தாய்லாந்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முத்துராஜாவின் எடை காரணமாக முன்பக்கத்தில் ஏற்பட்ட காயங்கள் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதேவேளை முத்துராஜாவின் சிகிச்சைக்கு என மோசடியான உதவி கோரல்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக சிகிச்சை செய்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முத்துராஜாவுக்காக என்று கூறி சமூக வலைதளங்களில் மோசடி இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.