சர்வதேசத்துக்கு அடிப்பணிய மாட்டோம் - அலி சப்ரி!
இலங்கையின் பொறுப்பு கூறல் உள்ளக பொறிமுறைக்கமையவே முன்னெடுக்கப்படும் எனவும் சர்வதேசத்துக்கு அடிப்பணிய மாட்டோம் எனவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், இலங்கை பொறுப்புகூறலை உறுதிப்படுத்துவதற்கு தாமதிக்கும் பட்சத்தில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அறிக்கைக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டிலுள்ள 2 கோடி இலங்கை பிரஜைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுமே, தவிர எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது எனக் கூறினார்.
பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கையில் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்வோம் என்றும், சர்வதேச பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச பொறிமுறைகளை ஏற்றுக்கொண்டால், இலங்கையிலுள்ள மக்கள் மத்தியில் மேலும் பிரிவினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறிய அவர், பொறுப்பு கூறல் விவகாரத்தில் வெளிநபர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது எனவும் கூறினார்.