நடன நிகழ்ச்சியை காணச் சென்ற இளைஞன் தோட்டக் கிணற்றில் சடலமாக மீட்பு
எப்பாவல, இண்டிகஹவெவ பிரதேசத்திலுள்ள தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 29 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றில் அறிக்கையிடுமாறு கெக்கிராவ பதில் நீதவான் பி. எம். கஸ்ஸாலி இப்பலோகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மத்திய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பணிபுரியும் திருமணமான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் கடந்த 30ஆம் திகதி இரவு எப்பாவல இண்டிகஹவெவ கிராமத்தில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சியை காண செல்வதாக தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் அறிவித்துள்ளார்.
மறுநாள் மதியம் வரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் மனைவியும் இறந்தவரின் தாயும் இதுபற்றி இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிசார் மற்றும் உறவினர்கள் உட்பட பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இறந்தவரின் காலணி என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவ்விடத்திற்கு வந்த கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கஸ்ஸாலி குறித்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரை அனுப்பிவைத்து அறிக்கையை கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இப்பலோகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.