வடக்கின் சுற்றுலா தளமாக மாறவுள்ள புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்! புலம்பெயர் மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்மாள் ஆலயம் தற்பொழுது புனருத்தானம் செய்யப்பட்டு மிகப் பிரமாண்ட ஆலயமாக மாறியுள்ளது.
எமது நாட்டின் மிகப் பெரிய சைவக் கோயிலாக தற்போது இது உள்ளதாக கூறுகின்றனர். யாழ்ப்பாணம் வரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடப் போகும் பட்டியலில் நிச்சயமாக இக் கோயிலும் இருக்கப் போகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஞாபகப்படுத்துவது போல 501 தூண்கள், 07 இராஜகோபுரங்கள், பிரமாண்டமான கட்டிடங்கள் அமையப் பெற்ற ஆலயமாக இது விளங்குகின்றது.
இவ் ஆலயத்தின் அருகில் கடற்கரையோரமாக சவுக்கு மரங்களை நட்டு வளர்த்தும், அதற்கடுத்ததாக பனை மரங்களை தென்னை மரங்களை நட்டு வளர்த்துச் சூழல் பாதுகாப்பைப் பேணி உள்ளார்கள் அப்பகுதி மக்கள்.
இப் பகுதியில் வாழ்ந்த புலம்பெயர் மக்களால் இவ் ஆலயம் அழகாவும் பிரமாண்டமானதாகவும் கட்டப்படுள்ளது. ஆலய கும்பாபிஷேக நிகழ்விற்கு உலகின் நாலா திசைகளிலும் இருந்து 20 000 பேர் வந்தமை போன்றவை வியப்புக்குரியவை.
1983 ஆம் ஆண்டின் பின்பான களநிலைமையால் குறிப்பாக 1990 ஒக்ரோபர் மாபெரும் இடப் பெயர்வின் பின்பாக உலகெங்கும் இப் பகுதி மக்கள் புலம் பெயர்ந்தார்கள். . குடியிருந்த நாடுகளிலும் மெல்ல மெல்ல உழைத்து பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களை அமைத்தார்கள்.
இந்தநிலையில் புங்குடுதீவு புலம்பெயர் மக்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
01. மரக்கறிகளைப் பதனிடும் கைத்தொழிற்சாலையை அமைத்து எமது பிரதேச விவசாயிகளுக்குக் கைகொடுங்கள். மரக்கறிகள் ஒரு நேரத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து நட்டப்படுகின்றனர்.
02. காணியற்றோர், வீடற்றோருக்கு கண்ணகை அம்மனின் பெயரால், உங்களது இஸ்ட தெய்வங்களின் பெயரால் அமைத்துக் கொடுங்கள்.
03. பொருளாதார ரீதியில் நலிவுற்று இருப்போருக்குப் பொருத்தமான சிறு கைத்தொழில்களை அமைத்துக் கொடுத்து அவர்களது உற்பத்திகளை உங்களது வணிக நிலையங்களுக்கு வாங்குங்கள்.
04. உயர்தர வகுப்பில் கணித ,விஞ்ஞானக் கல்வியைக் கற்பதற்கு வறுமை தடையாக உள்ள மாணவர்களுக்கு உதவுங்கள்.
இப்படியாக பல பணிகள் உள்ளன. அறப்பணிகள் சார்ந்தும் எமது தாயகம் உங்களை எதிர்பார்த்து உள்ளது.



