மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
மன்னார் இலுப்பகடவாய் குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 92 கிலோகிராம் 250 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இலுப்பகடவாய் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் குழுவொன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது குளக்கரை பகுதியில் 3 சாக்கு மூட்டைகள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கொண்டு வரப்பட்டு, கடத்தல்காரர்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் நோக்கில் களப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.