பாடசாலை மாணவனை தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜெண்டிற்கு பிணை
கம்புருபிட்டிய பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் சார்ஜன்ட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை தன் காரில் அழைத்துச் சென்று தனது மகளுடனான காதலை நிறுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அச்சுறுத்தி தாக்கியதில் 15 வயதுடைய மாணவன் அண்மையில் கம்புருப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் என்பதுடன் அதற்கமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பெரேராவின் மேற்பார்வையில், மாத்தறை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்தல வீரசிங்க அவர்களின் பணிப்புரையின் கீழ் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.