கொள்ளுப்பிட்டியில் மடிக்கணினிகளை திருடிய முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது
இலங்கைக்கு மடிக்கணினிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள ஷோரூமிற்குள் புகுந்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் திருடிய மூன்று மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு அகுலான பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய போது ஒழுக்கமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
சந்தேகநபர் அதிகாலை 03.30 மணியளவில் நிறுவனத்தின் பின்புற சுவரின் உதவியுடன் ஜன்னல் வழியாக நிறுவனத்திற்குள் நுழைந்து திருட்டைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிறுவனத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இருந்த போதிலும், சந்தேக நபர் உறங்கிக் கொண்டிருந்த போதே இந்தத் திருட்டைச் செய்துள்ளார்.
நிறுவனம் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த காட்சிகளில் உள்ளவர் சில மாதங்களுக்கு முன்னர் அருகில் உள்ள இடத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், அதற்குள் அவர் பாதுகாப்பு அதிகாரி பதவியை விட்டு விலகியிருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, தெனியாய பிரதேசத்தில் வைத்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரது வீட்டில் திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகளும், மற்றைய மடிக்கணினிகள் 25,000 ரூபாவுக்கு மாகல்ல பகுதியிலுள்ள அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டிருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.