பொலிஸ் மா அதிபர் பதவிக்காக மூவரின் பெயர்களை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பும் ஜனாதிபதி!
தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று பெயர்களை பரிந்துரைப்பார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சி.டி. விக்கிரமரத்ன இரண்டு சேவை நீடிப்புகளைப் பெற்ற பின்னர் ஐ.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த கட்டத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, எல்.எஸ்.பதிநாயக்க, தேஷ்பந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய, பி.பி.எஸ்.எம் தர்மரத்ன ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இவர்களில் மூன்று பேரை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நிலந்த ஜயவர்தன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட சமய தலைவர்கள் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.