எம்.பியின் மேன்முறையீடுக்கு அமைய 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் விடுவிப்பு!
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முறையீட்டிற்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, மேல்முறையீட்டு CUS/APP/11/2023 இன் படி, பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் வரிகளை வசூலித்ததன் பின் தங்கப் பொருட்களை விடுவிக்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி. நோனிஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.BIA/CASE/0112023 என்ற சுங்க வழக்கு விசாரணை உத்தரவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 27.02.2023 அன்று செய்த மேல்முறையீடு தொடர்பிலேயே சுங்கப் பணிப்பாளர் நாயகம் இந்தத் தங்கப் பொருட்களை விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட எம்.பி.யால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, மேல்முறையீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு சுங்கத் தீர்ப்புக்கும் எதிராக மேன்முறையீடு செய்ய சுங்கத்தில் மேன்முறையீட்டுக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக அரசியல்வாதியோ அல்லது வேறு எவரேனும் சுங்கத் தீர்மானம் தொடர்பில் மேற்படி குழுவிடம் முறையிட முடியும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சுதத் ஐ. சில்வா தெரிவித்தார்.
மேல்முறையீட்டு நடவடிக்கைகளைக் கவனிக்க தனி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குக் கீழ் மேன்முறையீட்டுக் குழு இருப்பதாகவும், இயக்குனருக்குக் கிடைக்கும் முறையீடுகள் மேல்முறையீட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழுவின் பரிந்துரையை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் வழங்கவுள்ளதாகவும், உரிய பரிந்துரையின் அடிப்படையில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.