மின் கட்டணக் குறைப்பு : சொற்பக்கணக்கில் குறைத்துள்ளதாக எதிர்கட்சி விமர்சனம்!
அரசாங்கம் மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 500 வீதம் அதிகரித்து விட்டு தற்போது மிகவும் சொற்பக்கணக்கில் குறைத்துள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மின் கட்டணம் அதிகரிக்க எடுத்த தீர்மானம் குறித்து தெரிவுக்குழு அமைக்குமாறு நாங்கள் தெரிவித்த பின்னரே இந்த கட்டண குறைப்பையும் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது எனக் கூறினார்.
மின்கட்டண திருத்தம் குறித்து தெரிவு குழு ஒன்றை அமைக்குமாறு மகஜர் ஒன்றை கையளித்திருந்தோம். அது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.
மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் நூற்றுக்கு 500வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நூற்றுக்கு 500வீதம் மின் கட்டணம் அதிகரித்த அரசாங்கம் தற்போது மிகவும் சொச்சக்கணக்கில் மின் கட்டணத்தை குறைத்து மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரசாரம் செய்து வருகிறது என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியுமான அளவுக்கு மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.