ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை மறுசீரமைக்காவிடின் 6000 பணியாளர்கள் வேலையிழப்பர்
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நட்டமீட்டிவரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.