ஆஷாட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் சகல பாவமும் நீங்கப்பெறலாம். இது ஏற்பட்ட கதை....
முக்கியமான ஏகாதசி விரதங்களில் ஆனி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசி விரதமும் ஒன்று. இது தேவர்களுக்கும் உரிய ஏகாதசி என்பதால் மிக புனிதமான ஏகாதசி விரதமாக இது கருதப்படுகிறது.
இந்த விரதம் இருப்பவர்களுக்கு பாவங்கள் அனைத்தும் நீங்கி, பலவிதமான நன்மைகள் வாழ்வில் கிடைக்கும். இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவது பல மடங்கு புண்ணிய பலனை தரும். ஒவ்வொரு ஏகாதசிக்கு ஒரு கதை இருப்பது போல் தேவசயன ஏகாதசிக்கும் ஒரு கதை உண்டு.
முன்பு ஒரு காலத்தில் மந்தாதர் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தான். அவரது நீதி தவறாத ஆட்சியில் நாட்டு மக்களும் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ஒருமுறை கடுமையான பஞ்சமும், வறட்சியும் அந்த நாட்டை தாக்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகள் மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தனர். கடைசியாக மன்னனிடம் சென்று மக்கள் முறையிட்டனர்.
இந்த திடீர் பஞ்சத்திற்கு காரணம் தெரியாமல் தவித்த மன்னனும், தனது படைகளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு காடாக சென்று பல முனிவர்களை சந்தித்து, தங்கள் நாட்டின் பஞ்சம் தீர வழி கேட்டார். கடைசியாக ஆங்கி ரஸ முனிவரை சந்தித்தார் மன்னர்.
மன்னரின் நிலையை கேட்ட முனிவர், உங்களின் ராஜ்ஜியத்தில் பிராமணன் அல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனாக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவனை உடனடியாக கொன்று விட்டால் நிலை சரியாகும் என்றார்.
கொலை செய்யும் அளவிற்கு இது குற்றம் இல்லை என கருதிய மன்னன் மாற்று வழி இருந்தால் கூறும் படி கேட்டார். முனிவரும் தேவ சயனி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கும் படி சொன்னார்.
நாடு திரும்பிய மன்னன், தான் ஏகாதசி விரதம் இருந்ததுடன் நாட்டு மக்களையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்கும் படி கூறினார். இதனால் அந்த நாட்டில் வறட்சி, பஞ்சம் நீங்கி, வளம் உண்டாயிற்று. தேவ சயனி ஏகாதசி விரதம் இருந்தால் எந்த ஒரு பாவமாக இருந்தாலும் அது நீங்கி ஆன்மிக சக்தி அதிகரிக்கும்.
வாழ்வில் இருக்கும் அத்தனை தடைகள், பாவங்கள் மற்றும் சாபங்களால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் விலகும். பாண்டுரங்கன் மீது தீராத பக்தி கொண்ட துக்காராம் மகராஜ் மற்றுமண ஞானேஸ்வரர் ஆகியோர் தங்களின் பக்தர்களுடன் பாண்டுரங்களை காண பல மைல்கள் பாத யாத்திரையாக வந்தனர்.
அவர்கள் பண்டரிபுரம் வந்து சேர்ந்த நாள் ஆஷாட ஏகாதசி ஆகும். இதை நினைவு கூறும் விதமாக ஆஷாட ஏகாதசி நாளில் துக்காராம் மகராஜின் பாதுகைகள் பல்லக்கில் வைத்து, பண்டரிபுரம் எடுத்து வரப்படுகிறது. பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பண்டரிபுரம் வந்து பாண்டுரங்கனை வழிபட்டு செல்வது வழக்கம்.