225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும் - விஜயதாஷ!
நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தமைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பொருளாதார கொள்கையை அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைத்ததால் நாடு என்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம்.இதனால் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியிருந்தது.
தற்போது வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் 17 ஆவது தடவையாக ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
ரணில், ராஜபக்ஷ, மைத்திரி என தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று எதிர்க்கட்சி பக்கமும், ஆளும் தரப்பு பக்கமும் உள்ளார்கள். ஆகவே எவரும் பொறுப்பில் இருந்து விலக முடியாது.
கடன் மறுசீரமைப்பை தவிர சிறந்த மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் எதிர்க்கட்சிகள் தாராளமாக முன்வைக்கலாம்.அவ்வாறான யோசனைகளை நிதியமைச்சரான ஜனாதிபதியிடம் முன்வைத்து மறுகணமே கடன் மறுசீரமைப்பு யோசனையை மாற்றியமைக்கிறேன்” எனக் கூறினார்.