பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

பிரான்ஸில் நான்காவது நாளாகவும் கலவரம் நீடிக்கின்ற நிலையில், ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி மார்சேயில் இயங்கி வரும் துப்பாக்கிக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பல பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸ் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த நேஹெல் மெர்சூக் என்ற 17 வயது இளைஞன், பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் தலைத்தூக்கியுள்ளன.
பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் படங்களில், நாடுமுழுவதும் பற்றி எரிவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே இரவில் 1311 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 79 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நகரில் துப்பாக்கிகளை விற்கும் கடையொன்றை உடைத்த கொள்ளையர்கள் பல வேட்டையாடும் துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.



