ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வருடாந்த 9 வீத வட்டியும் வழங்கப்படும் - ஜனாதிபதி
உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பதில் வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு விசேட பங்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உண்மையான நிலைமையை தெளிவுபடுத்துவதன் மூலம், இந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் ஒட்டுமொத்த மக்களிடையே உள்ள புரிதல் இன்மை மற்றும் தேவையற்ற அச்சத்தை நீக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (29ஆம் திகதி) நடைபெற்ற இரண்டு கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சமூகத்தினரை முதலில் சந்தித்த ஜனாதிபதி, இந்த கடனுதவித் திட்டத்தினூடாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் எனவும், அதனால் நிதிக் கடப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் காலவரையறை குறிப்பிட முடியாத போதிலும், ஒரு சில மாதங்களில் வட்டி விகிதங்களில் கணிசமான குறைப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாவிட்டால் சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ள இவ்வாறானதொரு சூழ்நிலையில் டொலரின் பெறுமதி மீண்டும் உயரும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கு இணையாக உள்நாட்டுக் கடனை மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வருடாந்த 9 வீத வட்டியும் அவ்வாறே வழங்கப்படும் என சட்டம் உத்தரவாதம் அளிப்பதாகவும் எனவே எதிர்கால நன்மைகள் தொடர்பில் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதன் மூலம், நாடு அபிவிருத்திக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதாகவும், இதன் மூலம் கடந்த காலங்களில் தடைப்பட்டிருந்த நிர்மாணத் துறை மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.