சீனா வளர்ச்சி பாதையை நோக்கி நகர்கிறது - தினேஷ் குணவர்தன
மேற்கத்திய நாடுகள் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை (BRI) கடன்பொறி என கொச்சைப்படுத்தினாலும், சீனா தனது வளர்ச்சி பாதையை நோக்கி படுப்படியாக முன்னேறி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
CGTN செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பல அபிவிருத்தி சவால்களுக்கு தீர்வு காண முடியும் என்பதை சீனா உலகிற்கு நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா முக்கியப் பங்காற்றுவதாகவும், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு BRI உறுதியான அடித்தளங்களை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனா மற்ற நாடுகளை கடன்பொறிக்குள் சிக்கவைத்து வருவதாக மேற்கத்தேய நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், இது குறித்து பதிலளித்த அவர், பல ஆண்டுகளாக இந்த விவாதம் நடைபெற்று வருவதாகவும், சீனா பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்த நாடு என்றும், இதை எவராலும் புறக்கணிக்க முடியாது என்றும் கூறினார்.
அமெரிக்காவிலும் சீனா முதலீடு செய்துள்ளது, முழு ஆசியாவிற்கும் புதிய பொருளாதார வளர்ச்சியில் பெல்ட் மற்றும் ரோட் அபிவிருத்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.