பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை!
ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கத்தால் தொடர்ந்தும் பராமரிக்க முடியாது எனவும் இதனால் 6000 ஊழியர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்தும் வீணடிப்பது அநியாயம் எனவும் தெரிவித்த அவர், இந்த செயற்பாடுகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கூறினார்.