இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தினை நிறுத்தியிருக்கலாம்!
தமிழர்கள் கொல்லப்பட்ட இறுதி போரை நிறுத்துவதற்கு 2009 இல் இந்தியா தலையிட்டு எளிதில் நிறுத்தியிருக்கலாம் என தமிழக பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையில் கருத்து, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தெ பெடரல் என்ற செய்தித்தளத்தில் தமது கருத்தை வெளியிட்டுள்ள இந்திய முன்னணி ஊடகவியலாளர் எம்ஆர் நாராயணசாமி, இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் கொல்லப்பட்ட இந்த போரை நிறுத்துவதற்கு 2009 இல் இந்தியா எளிதில் தலையிட்டிருக்கலாம், ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் அதனை செய்யவில்லை என்று அண்ணாமலை, அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஈழத் தமிழர்களின் நண்பர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட தமிழ்நாட்டில் இருந்தவர்களும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதிலேயே மும்முரமாக இருந்தனர் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் லண்டனில் கே.அண்ணாமலையின் கருத்துக்கள், பார்வையாளர்களிடமிருந்து பெரும் கரவொலியை எழுப்பியதாக ஊடகவியலாளர் எம்ஆர் நாராணயசாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலம்பெயர்ந்தோர் அண்ணாமலையில் புதிய நண்பரைக் கண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திராவிட அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களுக்காக உணர்வுப்பூர்வமான பேச்சுக்களை நிகழ்த்துவதைத் தவிர திடமான எதையும் செய்யவில்லை என்றும் லண்டன் உரையின்போது அண்ணாமலை குற்றம் சுமத்தியிருந்தார்