அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 'ஸ்லீப் அப்னியா' நோய் - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக 'ஸ்லீப் அப்னியா' எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு CPAP சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் 'ஸ்லீப் அப்னியா'வுக்காக சிபேப் கருவி பயன்படுத்துகிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டே பைடன் தனக்கு 'ஸ்லீப் அப்னியா' பிரச்சினை இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை சிகோகாவில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற பைடன் புறப்பட்டபோது அவர் முகத்தில் சிபேப் கருவியின் அழுத்தத்தினால் ஏற்பட்ட சுவடு தெளிவாகத் தெரிந்தது.
அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வெள்ளை மாளிகை, "அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை இரவு சிபேப் கருவி பயன்படுத்தினார்" என்று கூறி அவருக்கு ஸ்லீப் அப்னியா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 60 லட்சம் பேர் ஸ்லீப் அப்னியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 'ஸ்லீப் அப்னியா' என்னும் உடல்நலப் பிரச்னை காரணமாக இந்தியாவில் மட்டும் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
80 வயதான ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே மிகவும் அதிக வயது கொண்ட அதிபர் என்ற அடையாளம் பைடனைச் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.



