ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு காணியொன்றை குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!
#SriLanka
#Lanka4
#UAE
Thamilini
2 years ago
ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள கட்டடம் ஒன்றுக்கான காணியை நீண்டகாலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனம் இலங்கையில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக முதலீடு செய்யவுள்ளது.
இதற்காக இலங்கை மின்சார சபையின் பொறுப்பில் உள்ள மவுசகலே நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றையும், நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகைக்கு விடுவதற்கான முன்மொழிவு சபையில் சமர்பிக்கப்பட்டது.
இதற்கமைய ஏற்புடைய நிறுவனங்களின் உடன்பாடுகளைப் பெற்றுக்கொண்டு, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.