பிரான்சில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் பலி!

பிரான்சில் போக்குவரத்து விதிகளை மீறி காரை செலுத்திய 17 வயதான இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பாரீஸ் புறநகர் பகுதியான நாந்தேரில் (Nanterre) நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் போக்குவரத்து சோதனை நிறுத்தத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்த நிலையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பாதுகாப்பு படையினரின் தயார் நிலைக் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து கடமையில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு பிரான்சில், போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறியமை காரணமாக 13 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் 5 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



