புதிய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடிய சீன தூதுவர்!
இலங்கைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவை சீனா பாராட்டுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
26.06.2023 அன்று கொழும்பில் அலரிமாளிகையில் பிரதமர் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஐச் சந்தித்தபோது, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகள், சீனாவிடமிருந்து நேரடி முதலீடுகள் மற்றும் துறைகளில் முதலீடுகள் குறித்து பேசப்பட்டது.
விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் நீர் வழங்கல் ஆகிய திட்டங்கள் சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய முதலீட்டுத் திட்டங்கள், சீனாவுடனான வர்த்தக விரிவாக்கம், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி, விவசாயம், கலாசாரப் பரிமாற்றங்கள், உயர்மட்ட உறவுகள், பின்தங்கியவர்களுக்கான உதவிகள் ஆகியவை இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் உயர் விளைச்சல் கொண்ட அரிசி வகைகளை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அரிசி உற்பத்தியை அதிகரிக்க கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சீன தூதுவரிடம் பிரதமர் விசேட கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் சிரமங்களை சமாளிப்பதற்கான முயற்சிகளை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளை எதிர்கொள்ள சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதியளித்தார் என தூதுவர் கியு ஷென்ஹோங் தெரிவித்தார்.
பதுளை, புத்தள போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வித் தேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதில் சீனாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் இலங்கையின் இறையாண்மைக்கான சீனாவின் நிலைப்பாடு குறித்தும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று இருதரப்பு உறவுகள் பற்றிய மகிழ்ச்சியான குறிப்புடன் கலந்துரையாடல் தொடங்கியது.
இச்சந்திப்பில் சீனத் தூதுவர் நீண்டகால கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டதுடன், சீன பௌத்த சங்கங்கள் தொடர்ந்தும் விகாரைகளுக்கு உதவுவதுடன் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தேரவாத பௌத்த நிலையத்தை இலங்கையில் நிறுவும் என்றும் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகளை விரைவாக செயல்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க பிரதமர் ஒப்புக்கொண்டார்.