யார் இந்த யெவ்கெனி ப்ரிகோஷின் தலைமை தாங்கும் வாக்னர் படையணி

ரஷ்ய அதிபா் விளாடிமீா் புட்டினின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தங்களது படையினா் தலைநகா் மாஸ்கோவை நோக்கிச் செல்லவில்லை என்று வாக்னா் குழு தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திங்கள்கிழமை கூறினாா்.
இது குறித்து, ஆயுதக் கிளா்ச்சிக்குப் பிறகு வெளியிட்டுள்ள முதல் விடியோ அறிக்கையில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:
வாக்னா் குழு படையை கலைக்கவும், அதன் படைப் பிரிவுகளை ரஷ்ய பாதுகாப்புத் துறையின் கீழ் நேரடியாக இணைத்துக்கொள்ளவும் ரஷ்ய ராணுவ உயரதிகாரிகள் இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்தனா்.
எனினும், வாக்னா் படைப் பிரிவு தளபதிகள் இதனை ஏற்கவில்லை. இது தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவா்கள் மறுத்து விட்டனா். அதையடுத்து, ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்களில் 30 வாக்னா் படையினா் உயிரிழந்தனா்.
வாக்னா் படையைக் கலைக்கும் முடிவுக்கும், இந்த படுகொலைகளுக்கும் எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் மாஸ்கோவை நோக்கி எங்களது படைகள் சென்றன.
மற்றபடி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டு அதிபா் விளாடிமீா் புட்டினின் ஆட்சியைக் கலைப்பதற்காக நாங்கள் தலைநகரை நோக்கி செல்லவில்லை என்றாா் அவா்.
வாக்னா் குழு என்று பொதுவாக அழைக்கப்படும் ‘வாக்னா் பிஎம்சி (பிரைவேட் மிலிட்டரி கம்பெனி)’, ரஷ்யாவை சோ்ந்த தனியாா் ராணுவ நிறுவனமாகும். ரஷ்ய சட்டத்தின் கீழ் தனியாா் ராணுவ நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லையென்றாலும், ரஷ்ய அரசின் நலன்களுக்காக வாக்னா் குழு போரிட்டு வருவதால் அந்தப் படையினருக்கு ஆயுதங்களையும், பயிற்சியளிப்பதற்கான வசதிகளையும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக வழங்கி வருகிறது.
இதன் காரணமாக, ரஷ்யாவின் மறைமுக துணை ராணுவப் படை எனவும், அதிபா் விளாடிமீா் புட்டினின் தனியாா் ராணுவம் எனவும் வாக்னா் படை வா்ணிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாக்னா் குழு, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரிலும் பங்கேற்றுள்ளது.
உக்ரைன் படையினருடன் மிகக் கடுமையாக போரிட்டு அந்த நாட்டின் பாக்முத் நகரை கடந்த மாதம் வாக்னா் படை கைப்பற்றினாலும், சண்டையில் தங்களுக்குப் போதிய ஆயுத உதவிகளை அளிக்கவில்லை என்று யெவ்கெனி ப்ரிகோஷின் பகிரங்கமாக குற்றம் சாட்டினாா்.
அதன் பிறகும் ரஷ்ய ராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக அவா் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தாா். இந்த நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் கடந்த சனிக்கிழமை நுழைந்த வாக்னா் படையினா், தலைநகா் மாஸ்கோவை நோக்கி ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்றது சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
எனினும், ரஷ்யா்களின் ரத்தம் சிந்துவதைத் தவிா்ப்பதற்காக ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாகக் கூறிய ப்ரிகோஷின், தனது படையினரை உக்ரைன் திரும்ப உத்தரவிட்டாா்.
தனது நீண்டகால நண்பரும், பெலாரஸ் அதிபருமான அலெக்ஸாண்டா் லுகெஷென்கோ மற்றும் ரஷ்ய அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அவா் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவா் பெலாரஸில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



