விமானங்கள் இரத்து: ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளது. திட்டமிடப்பட்ட குத்தகைக் காலாவதியால் விமானப் பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீ லங்கன் கணித்திருந்தது, எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் எதிர்பார்த்ததை காட்டிலும் நிலைமை மோசமடைந்தது.
உள்நாட்டில் உதிரிபாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய குத்தகைகளுக்கான கொள்முதல் செயல்முறையும் தாமதமானது.
எனினும், எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் இந்த நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 57 விமானிகள் பணியிலிருந்து விலகியுள்ளனர்.
மேலும் சிலர் வெளியேறலாம் என எதிர்பார்க்கலாம். கொவிட் தொற்றுக்கு முன்னதாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் 27 விமானங்களுக்காக 320 விமானிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும், விமான நிறுவனத்தில் தற்போது 257 விமானிகளே உள்ளனர். இது விமான சேவையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சராசரி பணியாளர்களின் விமானப் பயண நேரத்தை உலகளாவிய தரங்களுக்குள் வைத்திருக்கவும் போதுமானது என்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், தென் கொரியாவுக்காக பரவலாக அறிவிக்கப்பட்ட விமானம் உட்பட சிறிய எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே, திட்டமிடப்பட்ட பணியாளர்கள் மற்றும் மாற்று விமானிகள் திடீரென கிடைக்காததால் இன்று வரை இரத்து செய்துள்ளது