சவுதி பாலைவனத்தில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம்!
சவுதி அரேபியா நாட்டில் பாலை வனம் உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த பாலைவனத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சிற்பகலை மற்றும் கட்டிடங்களை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இந்த பகுதியில் தற்பொழுது கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு “மராயா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் என்ற இரு நிறுவனங்களும் இணைந்து இந்த நவீன கண்ணாடி கட்டிடத்தை கட்டியுள்ளனர். அந்த பகுதி பாலை வனம் என்பதால் அங்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனால் அந்த பகுதியில் கண்ணாடி கட்டிடம் அமைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி கட்டிடமானது அதிகமான வெயில், வானிலை மாற்றங்கள் போன்றவற்றை சமாளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கண்ணாடி கட்டிடத்தின் உட்புறத்தில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இதில், இசை நிகழ்ச்சிகள் நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பாலைவனத்தின் காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.