ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு! கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு. கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மாணவர்கள், மீண்டும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு திரும்பும் வகையில், அரசு போக்குவரத்து கழங்கங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



