அமெரிக்காவில் பாடசாலை அருகில் துப்பாக்கிச் சூடு: இரு மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் பாடசாலை அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததோடு ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பே உயர்நிலை பாடசாலைக்கு அருகில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொள்ள மாணவர்கள் ஒன்று கூடியிருந்தவேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் தெரியவருவதாவது,
இரவு விருந்தில் அங்கிருந்த 19 வயதான கேமரூன் எவரெஸ்ட் பிராண்ட் என்ற இளைஞனே துப்பாக்கியை எடுத்து மாணவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதில் 15 முதல் 18 வயதான ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றோர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் துப்பாக்கி தோட்டா அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களையும் பதம்பார்த்தது.
துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய 18 வயது மற்றும் 16 வயதான இருவர் நியூ ஆர்லீன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை செய்த பொலிஸார் , துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இருவரும் ஹான்காக் உயர்நிலை பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



