பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நுவரெலியாவிடமிருந்து அதிகபட்ச பங்களிப்பைப் பெறுவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

இலங்கையில் 4 வருடங்களுக்குள் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முக்கிய சுற்றுலா நகரமான நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்றின் ஊடாக செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலாத் திட்டம் என்பன வெளியிடப்பட்டன.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது என பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய கவர்ச்சிகரமான நகரமாக நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை இனங்கண்டு அந்தத் திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெரிய கட்டிடங்களுக்குப் பதிலாக அவர்கள் இளைப்பாறக்கூடிய மிதமான சூழலுடன் அந்த அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
நுவரெலியா நகரில் உத்தியோகபூர்வமற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக முறையான திட்டத்திற்கு அமைய கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.



