196 கிலோ போதைப்பொருள் வழக்கு : சந்தேகநபர்களை விடுதலை செய்த நீதிமன்றம்

வடக்கு கடற்பரப்பில் 196 கிலோகிராம் ஹெரோயின் இறக்குமதி செய்தல், வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆதித்ய படபாண்டிகே, மஞ்சுளா திலகரத்ன மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் வழங்கிய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நீதிபதிகள், விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பொலிஸார் முன்வைத்த சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும், அவர்கள் நிரபராதிகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, திருகோணமலையில் இருந்து சுமார் நானூறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள சர்வதேசக் கடலில் 196 கிலோ 986 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது இந்த ஐந்து பிரதிவாதிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் சட்டமா அதிபர் இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றினார். இதுவே 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச் முன் தாக்கல் செய்யப்பட்ட முதல் போதைப்பொருள் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.



