கிராம கட்டமைப்புகளை பலப்படுத்தலே போதைப்பொருள் ஒழிப்பின் முதல் படி

2009 போர் முடிவுக்கு பின்னர் சிறீலங்காவின் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பரவலாக்கம், பாவனை அதிகரித்துள்ளது. போர் நடந்த ஒரு தேசத்தில் போரின் பின்னர் அந்த சமூகங்களை குறிப்பாக இளையோரை மேலும் சீர்குலைக்க எதிரி கையாளும் ஒரு இலகுவான ஆயுதம் தான் போதைப்பொருள். அதற்கு எமது ஈழத்தமிழ் சமூகமும் அடிமையாகிக் கொண்டு செல்கிறது என்றால் எங்கே தவறு நடக்கின்றது என்பதனை நாங்கள் ஆழமாக பார்க்க வேண்டும்.
அன்று கிராமங்களில் வலுவான ஒற்றுமை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவும் பண்பாடு இருந்தது. சனசமூக நிலையங்கள் திறம்பட இயங்கின. அறநெறி வகுப்புகளும் சமூகம் சார்ந்த சிந்தனையுள்ளோரால் நடாத்தப்பட்டது. ஊரில் இளையோருக்கு வழிகாட்டவென பெரியோர்கள் இருந்தார்கள். அவர்கள் இளையோரின் வாழ்க்கை, கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன செய்யலாம் எனும் நிலை வரும் போது வழிகாட்டினார்கள். வழிப்படுத்தினார்கள். ஊரில் புதிதாக யாரும் வந்தாலே தம்பி எங்கேயிருந்து வருகிறீர்கள்? என்ன விடயம் என்று கேட்க மரத்தடியில் ஒரு பெரியவர் இருந்தார். பெற்றோர்களுக்கும் - பெரியவர்களுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்தது. அன்று கைபேசிகள் இல்லாவிடினும் தேவையில்லாத ஒரு விடயத்தில் சிக்கி ஒரு இளைஞன் வீடு வர முன்னரே வீட்டாருக்கு தகவல் வந்துவிடும். சமூகப் பாதுகாப்பு உச்ச நிலையில் இருந்தது. எல்லாவற்றுக்கும் ,மேலாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்த தலைமையொன்று பாதுகாப்பரணாக இருந்தது. அது தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது.
இன்று மேய்ப்பன் இல்லாத மந்தைகள் போல் தமிழினம் சிதறிக் கிடக்கிறது. தமிழ்மக்களுக்கு வலுவான அரசியல் தலைமை அவசியம். ஆனால், இன்று அது இல்லை. இது தான் இன்று எல்லா சீரழிவுக்கும் காரணமாக இருக்கிறது. இந்தமண்ணில் எம் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான இளையோர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்த மண்ணிலிருந்து இப்படி போதைப்பொருள் பாவனையுள்ள இளைய சமுதாயம் உருவாக எப்படி பார்த்துக் கொண்டிருப்பது?
இன்று கிராமங்கள் கிராமங்களாக இல்லை. கிராமங்கள் நகராமயமாதலை நோக்கி செல்கின்றன. நகரத்து வாழ்க்கை முறைக்கு கிராமத்தவர்களும் பழகிவிட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரன் யார் என தெரியாத நகர வாழ்க்கைக்கு எம்மக்களும் பழகி விட்டார்கள். இன்று ஊருக்குள் வந்து போகும் புதியவர்கள் யார் என தெரியாத நிலை. இதனை கண்காணித்த பெரியவர்களும் ஒதுங்கி விட்டார்கள். கேள்வி கேட்டாலே உயிராபத்து எனும் நிலை. சமூகம் சீர்குலைந்து இருந்தால் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட சமூக விரோத செயல்களை செய்பவர்களுக்கு வேலை இலகு. ஏனெனில் இதற்கு அரசும் அதன் கட்டமைப்புகளும் துணை போகின்றன என்பது தான் அதிர்ச்சியான செய்தி.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இன்று பொலிஸாரே போதைப்பொருள்களுடன் பிடிபடும் நிலை உள்ளது. இது பொலிசின் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை நடக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் பலர் திடீர் பணக்காரர்களாகி சொகுசு வீடுகளுடன் ஊழல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த விடயம் இலஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவினருக்கே நன்றாக தெரியும். அதனால், ஊருக்குள் போதைப்பொருள் தொடர்பிலான தகவல் தெரிந்தால் பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கூறுங்கள் என இலஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவினர் சொல்லும் நிலை உள்ளது. அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக போஸ்ட்டர் கள் ஓட்டப்பட்டிருந்தன. அதில் போதைப்பொருள்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்தால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவியுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் இருந்து பொலிஸாரின் கையாலாகத் தனத்தை புரிந்து கொள்ளலாம். வடக்கில் ஒரு சில தமிழ் பொலிஸார் தான் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் சமூக விரோதிகளுடனும் பணத்துக்காக நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தகவல் உண்டு.
பாரிய வலையமைப்பாக இயங்கி வரும் போதைப்பொருள் கும்பலை முடக்குவது என்பது சாதாரண விடயமல்ல. இதற்கு சகல மட்டத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம். இன்று நாளாந்த செய்திகளில் பிடிபடுவது நெத்தலிகள் தான். சுறாக்கள் தப்பித்து விடுகின்றன. பெரும் போதைப்பொருள் புள்ளிகளுக்கும் பெரும் அரசியல்வாதிகள், பொலிஸின் உயர்மட்டம் வரை செல்வாக்கு உண்டு. தமிழர் தாயகத்தில் இன்றும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? அரச கட்டமைப்பு இதற்கு துணை போகின்றது என்பதே யதார்த்தம்.
இன்று வீடுகளில் கூட்டுக் குடும்ப அமைப்பு என்பது முற்றிலும் குலைந்து விட்டது. வாழ்ந்து வரும் தனிக்குடும்பங்களில் தாயும், தந்தையும் வேலைக்கு செல்லும் நிலை இருந்தால். பிள்ளைகளை கவனிக்க, கண்காணிக்க ஆட்களே இருக்க மாட்டார்கள். வீட்டுக்கு அருகிலும் சொந்தக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் இருக்க மாட்டார்கள். இதனால் போதைப்பொருளை நோக்கி இளையோர் செல்லும் நிலை உள்ளது.
இந்த போதைப் பொருள் கும்பலால் வயதானவர்களில் இருந்து இளம் பெண்கள் வரை வெளியிடங்களிற்கு நிம்மதியாக சென்று வர முடிவத்தில்லை. நிம்மதி தேடி கோயிலுக்கு செல்வார்கள் ஆனால் அங்கயும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. முதலில் கோவில்களில் திருவிழா நேரங்களில் இசைக் கச்சேரிகள், மேளக்கச்சேரிகள் என இசை மயமாகி இருக்கும் ஆனால் தற்பொழுது திருவிழா என்றாலே கோயில்களில் வாள் வெட்டு போதையை பாவித்துவிட்டு அடிதடி என இளைஞர்களின் அட்டகாசம் பெருகியுள்ளது. இதனால் பெரும்பாலானோர் கோவில்களுக்கு போவதையே நிறுத்தி விடுகின்றார்கள்.
இதனை எவ்வாறு தடுக்கலாம் என்றால்,
முதலில் கிராமங்கள் கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும். இளையோர்கள் கவனம் சிதறி செல்லாமல் இருக்க அவர்கள் தொடர்ச்சியான கல்வி, விளையாட்டை நோக்கி ஊக்கப்படுத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்கு சரியான முறையில் வழிகாட்டப்பட வேண்டும்.
இரண்டாவது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். போதைப்பொருளை கடத்துபவர், விநியோகிப்பவர் என எல்லோருக்கும் நீண்டகால சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
மூன்றாவது, போதைப்பொருளை கடத்தும் வாகனமும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களும் பொதுமக்கள் முன்னிலையில் கொளுத்தப்பட்ட வேண்டும்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கி சிறை செல்வோரை மீட்க சட்டத்தரணிகள் செல்லக் கூடாது. அவ்வாறு செல்லும் சட்டத்தரணிகளை சமூகம் ஒத்துக்கி வைக்க வேண்டும்.
இதில் இலங்கை போன்ற சிங்கள பெரும்பான்மை வாதம் உள்ள ஒரு நாட்டில் போதைப்பொருளை காட்டி தமிழர் ஒருவர் அரசியல் காரணங்களுக்காக இலகுவாக பழிவாங்கப்படவும் முடியும். இப்படியான சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இதனால் சட்டத்தரணிகள் உரிய முறையில் புலன்விசாரணை செய்து உண்மையில் போதைப்பொருள் கடத்துபவர், விநியோகிப்பவர் என அறிந்தால் அவர்கள் சார்பாக ஆஜராவதில்லை என்ற கொள்கை முடிவை தாங்கள் சார்ந்த சட்டத்தரணிகள் சங்கம் ஊடாகவே எடுக்க முடியும்.
உதாரணமாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் முன்னுதாரணமான ஆலயங்கள் இரண்டு செயலில் இறங்கி இருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
"மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமங்களில் ஒன்றான வெல்லாவெளி செல்வாபுரம் பகுதி ஆலயத்திலேயே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையினை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செல்வாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் அறிவிப்புகள் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகம் மற்றும் கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்ட விடையம் என்னவென்றால்,
செல்வாபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலே சீரான செம்மையான ஒரு எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலே ஆலயமும் அதனுடன் இணைந்த கிராம அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது அச்செயற்பாட்டிற்கு தடையாக அமைந்துள்ள ஆபத்தான போதைப் பொருள் பாவனை மற்றும் உற்பத்தியினை முற்றாக இக்கிராமத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அனைவருமாக இணைந்து செயற்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
அதற்கமைய,
1. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் நபர்களின் இல்லங்களுக்கு இன்றிலிருந்து கிராமம் சார்பாக எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்படமாட்டாது என்பதுடன் அவ்வாறானவர்களின் வீடுகளில் இடம்பெறும் மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகளில் கிராமத்திலுள்ளவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்.
2.இன்று முதல் செல்வாபுரம் கிராம எல்லைக்குள் ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களின் பெயர் விபரங்கள் ஆலய விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படும்.
3. ஆபத்தான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பற்றிய விபரங்கள் அரச உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபத்தான போதைப் பொருள் பாவனை அவதானிக்கப்பட்டால் உரிய மாணவன் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பப்படுவதுடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார் அத்துடன்இக்குற்றமிழைத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
5. ஆபத்தான போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் குடும்பங்களுக்கான சகல அரசாங்க உதவிகளும் கொடுப்பனவுகளும் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் தடைப்பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
6. மங்கள நிகழ்வுகளின்போது போதைப் பொருட்கள் பரிமாறுதலும் முற்றாக தடைசெய்யப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டால் அந்தக் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுக்கும் பொதுமக்களின் பங்குபற்றல் தவிர்க்கப்படும்.
எனவே இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகளிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் விடுபட்டு உயர்ந்த ஒரு சமூகத்தினை இந்த செல்வாபுரம் கிராமத்தில்கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாக வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."
இப்படி கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிராக ஆலய நிர்வாகங்களால் இவ்வாறு துணிச்சலுடன் இயங்க முடியுமாக இருந்தால், ஏன் ஏனைய இடங்களிலும் சமூக அமைப்புகளாலும் இவ்வாறு அதிரடி தீர்மானம் எடுக்க முடியாமலுள்ளது.
இப்படியான தண்டனையுடன் கூடிய கண்காணிப்பு பொறிமுறையினை ஒரு ஆலயம் மட்டுமல்ல சனசமூகநிலையம், மாதர் சங்கம், சிறுவர் கழகம் உள்ளிட்ட ஏனைய சிவில் சமூக அமைப்புகளும் எடுக்க முடியும். பாலர் பாடசாலையில் இருந்து மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை கொண்டுவர வேண்டும்.
எமது தேசத்தின் சகல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான கட்டமைப்பை கீழிருந்து மேல் நோக்கி வலுவாக கட்டமைத்தால் மட்டுமே போதைப்பொருள் இல்லாத சமுதாயமாக எம் இனத்தை முன்னேற்றலாம்.
-அமுது-



